விபத்தை தவிர்க்க முயற்சி - அரசுப் பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம்! - Thiruvannamalai news
சென்னையில் இருந்து தடம் எண் 122 என்ற அரசுப் பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை ஓட்டுநர் முருகன் என்பவர் இயக்கி வந்துள்ளார். இந்த பேருந்து சோமாசிபாடி கிராமத்தைக் கடந்து மலப்பாடி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி அருகே உள்ள குறுக்கு சாலையில் இருந்து வேலாயுதம் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இந்த நிலையில், குறுக்கு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு திடீரென இருசக்கர வாகனம் வந்துள்ளது. எனவே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் முருகன் அரசுப் பேருந்தை வலது புறமாகத் திருப்பி உள்ளார். இவ்வாறு திருப்பிய போது, பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் மோதிய பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் முருகன், நடத்துனர் அன்வர் உள்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.