விளை நிலத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர், நடத்துநர்! - bus accident in Tiruppathur
Published : Nov 4, 2023, 12:55 PM IST
திருப்பத்தூர் அருகே மலை கிராமத்தில் அரசு பேருந்து விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர்.
ஜவ்வாது மலையில் உள்ள நடுக்குப்பத்தில் இருந்து இன்று (நவ. 4) காலை, அரசு பேருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில், மலைக் கிராமம் உண்ணந்துரை கூட்டு சாலையின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் (வாழைத்தோப்பு) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில், பேருந்து விவசாய நிலத்தில் கவிழ்ந்து முழுவதுமாக சேதம் அடைந்த நிலையில், திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மலை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.