காட்பாடி ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு வேர்க்கடலை அலங்காரம்! - அம்மனுக்கு வேர்க்கடலையில் அலங்காரம்
வேலூர்:காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், கிராம தேவதையான ஸ்ரீ வஞ்சியம்மன் குழந்தை ரூபத்தில் அவதரித்துள்ளார். ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை ஒட்டி வஞ்சியம்மன் ஆலயத்தில் இன்று(ஆகஸ்ட் 11) அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், பன்னீர், புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, பத்து கிலோ அளவிலான வேர்க்கடலைகளைக் கொண்டு வஞ்சியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேர்க்கடலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை வஞ்சியூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வேலூர் காட்பாடி, விருதம்பட்டு, கே.வி. குப்பம், லத்தேரி, குடியாத்தம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.