கலைஞர் நூற்றாண்டு விழா: நிலக்கோட்டை அருகே களைகட்டிய கிடா முட்டு போட்டி!
திண்டுக்கல்:நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம், மட்டப்பாறை ஆகிய கிராம பொதுமக்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. ராமராஜபுரம் மைதானத்தில் நடந்த போட்டிகளை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கிடாக்கள் இப்போட்டியில் பங்கேற்றன.
இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள், வயது வாரியாக மோதின. 75 முட்டுக்கள் இலக்காகக் கொண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் அதிக முட்டுகள் முட்டி வெற்றி பெற்ற கிடாக்களுக்குப் பித்தளை அண்டா, பீரோ என ஜல்லிக்கட்டு விளையாட்டில் வழங்கப்படும் பரிசுகள் போல் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் அப்பகுதியில் முதல்முறையாக நடைபெறும் கிடா முட்டு போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்து கிடா முட்டு போட்டியைக் கண்டு ரசித்தனர். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.