மியூசிக்கல் சேர், கோலப்போட்டியில் பங்கேற்ற ஜெர்மானியர்கள்.. வேலூர் அருகே சுவாரஸ்யம்! - ராணூவப்பேட்டையில் ஜெர்மனி குடும்பம்
Published : Jan 18, 2024, 9:43 AM IST
வேலூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். அந்த வகையில், வேலூர் கணியம்பாடி அடுத்த ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான்பேட்டை பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தம்பதி எலியோ மற்றும் ஓலிவியா பங்கேற்றனர்.
பொங்கல் பண்டிகையில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் அந்த ஊரிலேயே தங்கி, மக்களுடன் மக்களாக இருந்தனர். மேலும், கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். பின்னர், விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதால், இக்கிராமத்தை ராணுவப்பேட்டை என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கிராமம் குறித்து இணையம் மூலம் தெரிந்து கொண்டு, இந்த கிராமத்தைத் தேடி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்திருந்தது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.