புலி ஆட்டம், சிலம்பாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா! - வேலூர் மாவட்ட செய்தி
வேலூர்: குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி 1ஆம் தேதியான இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவைக் காண இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று அதிகாலை 4 மணி முதல் பூஜை புனஸ்காரங்களுடன் தொடங்கியது. கெங்கையம்மன் பல குடைகளுடன் முக்கிய வீதிகளில் மேள,தாளங்கள் முழங்க பக்தர்கள் புலி ஆட்டம், சிலம்பாட்டத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தும், சூரத் தேங்காய் உடைத்தும் கெங்கையம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சிரசு திருவிழாவில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கெங்கை அம்மன் கோயில் தேர்த் திருவிழா: உப்பு, மிளகை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன்!