நீலகிரியில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு.. வெண்மை போர்வை போர்த்தியதுபோல் தோற்றம்! - சுற்றுலா பயணிகள்
Published : Jan 18, 2024, 2:07 PM IST
நீலகிரி:உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த இரு நாட்களாக காலை நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து, பச்சை புல்வெளிகள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளித்தது.
அதனைத் தொடர்ந்து, அதிகாலைக்கு பின் வெயில்படத் தொடங்கியதும், பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பியது. மேலும், மூடுபனியின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தற்போது கடும் குளிர் நிலவுவதால், உள்ளூர்வாசிகள் பகல் நேரங்களிலேயே தீமூட்டி தங்கள் உடலை சூடேற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பனிமூட்டத்தால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தற்போது உறை பனியின் தாக்கம் அதிகமான நிலையில், மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், தேயிலைச் செடிகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்படையும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மேட்டுப்பாளையம் பகுதியில் பனிமூட்ட நேரங்களில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டுமென குன்னூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.