கொடைக்கானலில் உறை பனி காலம் துவக்கம்... குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்! - சுற்றுலா தலம்
Published : Jan 17, 2024, 11:27 AM IST
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலில் நிலவும் சீதோசன நிலையை அனுபவிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கொடைக்கானலில் வழக்கமாக எப்பொழுதுமே டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்தே முன்பனி காலம் துவங்கி உறை பனி காலமாக மாறி ஜனவரி மாதம் முழுவதும் நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டைப் பொருத்தவரை, டிசம்பர் மாதத்தில் சீதோசன நிலை மாற்றத்தாலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததாலும் உறை பனி காலம் ஜனவரி முதல் வாரத்தில் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு, தற்போது பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக உறை பனி சீசன் துவங்கியுள்ளது.
இதன் காரணமாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவு வருகிறது. மேலும் முதற்கட்டமாக கொடைக்கானல் ஏரி சாலை அருகில் உள்ள ஜிம்கானா பகுதியில் உறை பனி தென்படத் துவங்கி உள்ளது. உறை பனியால் பசுமை போர்த்திய புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தார் போன்று காட்சியளித்தது. மேலும், தொடர்ந்து உறை பனி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் உறைப்பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.