கோவையில் இலவச இ சேவை மையம் - அசத்தும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் - Coimbatore district news
கோயம்புத்தூர்:குறைகளை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண், சிசிடிவி கேமராக்கள், இலவச இ சேவை மையம் என தொடர்ந்து மோப்பிரிபாளையம் பேரூராட்சி நிர்வாக தலைவர் அசத்தி வருகிறார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சசிக்குமார் என்பவர் தலைவராக உள்ளார். சுயேட்சையாக வெற்றி பெற்ற இவர், பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி அலுவலகத்தில் கட்டணமில்லா இ-சேவை மையம் இன்று திறக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்கவும், புகார் அளிக்கவும் வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டது.
பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓடாந்துறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டணம் இல்லா இ சேவை மையத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில் கட்டணமில்லா இ-சேவை மையம் பேரூராட்சி சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்தல் என பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த சேவைகளை கட்டணம் இல்லாமல் இங்கு மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் "இதனால் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும். அடுத்த கட்டமாக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 500 இலவச கழிப்பிடங்கள் கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விரைவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பேரூராட்சியாக மோப்பிரிபாளையம் பேரூராட்சி உருவெடுக்கும்", என தெரிவித்தார்.