சென்னையில் நிழற்கூடம் சரிந்து விபத்து; 4 பெண்கள் காயம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - சாஸ்திரி நகர் போலீஸ்
சென்னை: பெசன்ட் நகரில் வண்ணான் துறை பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இன்று (ஜூன் 16) மாலை ஆறு பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து, அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதனைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள், உடனடியாக சிக்கிக் கொண்டிருந்த நான்கு பெண்களையும் லேசான காயங்களுடன் மீட்டனர். பின்னர் காயமடைந்த நான்கு பெண்களையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காயமடைந்த பெண்கள் திருவெற்றியூரை சேர்ந்த கோகிலா (வயது 69), திருவான்மியூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 40), வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 49) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த பூங்கொடி (வயது 60) என்பது தெரியவந்தது.
சரிந்து விழுந்த பேருந்து நிலைய நிழற்குடை, கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ அசோக் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டது என்பதும் நிழற்குடை தாங்கியிருந்த இரும்பு துருப்பிடித்து இருந்ததால் சரிந்து விழுந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிழற்குடை சரிந்து விழுந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் பதறி அடித்து ஓடி வந்து, சிக்கிக்கொண்டிருந்த பெண்களை மீட்டதால் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.