மனநலம் பாதித்த நபரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு! - ஏர்வாடி தர்கா
Published : Oct 12, 2023, 11:27 AM IST
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் உள்ள சடைமுனியன் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (34). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை வேளையில், சுமார் 30 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில், முன்னணி தீயணைப்பு வீரர்கள் சண்முகவேல், ஜெயராமன், அருண்குமார் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியின் மீது ஏறி தமீம் அன்சாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அவர் இறங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுப்பது போல கொடுத்து, அவரை திசை திருப்பி, தொட்டியில் மற்றொரு பக்கத்தில் இருந்த பைப் வழியாக தொட்டியின் மேல் சென்ற தீயணைப்பு வீரர் அருண்குமார், தமீம் அன்சாரியை பத்திரமாக பிடித்தார். அதனைத் தொடர்ந்து, தொட்டியின் மேல் சென்ற அதிகாரிகள் அவரை பத்திரமாக கீழே இறக்கி அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தற்போது இச்சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து, “ஏர்வாடி தீயணைப்பு வீரர் அருண்குமார் மனநலம் பாதித்த நபரை காப்பாறிய துணிச்சலான செயல்” என்று தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு பல்வேறு தரப்பினரும் இதுபோன்று எங்களுக்கு ஊக்கம் அளிக்கம் வேண்டும் எனவும், இதுபோல உயிரைப் பணயம் வைத்து மீட்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்றும் தங்களது கருத்துக்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.