ஒலி பெருக்கி மூலம் பிரார்த்தனை செய்தால் தான் அல்லா கேட்பாரா?: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு - ஒலி பெருக்கியில் இஸ்லாமியர் பிரார்த்தனை
மங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் மங்களூருவில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணை முதலமைச்சரும், எம்எல்ஏவுமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகே உள்ள பள்ளிவாசலில் ஒலி பெருக்கியில் தொழுகை (பிரார்த்தனை) ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதனால் ஈஸ்வரப்பா எரிச்சல் அடைந்தார்.
பின்னர் பேசிய அவர், "நான் எங்கு சென்றாலும் இந்த பிரார்த்தனை சத்தம் எனக்கு தலைவலியை தருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இந்த சத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். ஒலி பெருக்கியில் சத்தம் போட்டு பிரார்த்தனை செய்தால் தான் அல்லா கேட்பாரா? இந்துக்களும் கோயிலில் சென்று வழிபாடு நடத்துபவர்கள் தான். நாங்களும் மதச்சார்பு உடையவர்களே. ஆனால் இப்படி ஒலி பெருக்கியை பயன்படுத்த மாட்டோம். நீங்கள் ஒலி பெருக்கியை பயன்படுத்தி வழிபாட்டுக்கு அனைவரையும் அழைத்தால், அல்லா காது கேளாதவர் என்று அர்த்தம்" என கூறினார். ஈஸ்வரப்பாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் விழாக்காலங்களில் ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும், நள்ளிரவு வரை ஒலி பெருக்கிகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.