கோவையில் ஆறாவது நாளாக எரியும் காட்டுத் தீ; ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!
கோயம்புத்தூர்:ஆலாந்துறை அருகே நாதே கவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த 11ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது. காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 150 ஹெக்டேரில் 50 ஹெக்டேருக்கு மேல் தீ பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பசுமையான மரங்கள் அதிகம் சேதப்படவில்லை எனவும், காய்ந்த மூங்கில் சருகுகள் மற்றும் காய்ந்து போன மரங்கள், செடிகள் தான் காட்டுத் தீயால் எரிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்து தீயை அணைக்கும் முயற்சி குறித்து வனத்துறையினரிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இப்பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இருப்பினும் காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹெலிக்காப்டர் கேட்டு விமானப்படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆறாம் நாளான இன்று சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் இந்த பணியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு வருகிறார். மேலும் மாவட்ட வன அலுவலர்கள் ஆகியோரும் உடனிருந்து வருகின்றனர். இன்றுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.