குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்! யானை தாக்கி ஒருவர் படுகாயம்! வனத்துறை எச்சரிக்கை! - காட்டு யானைகள் தாக்கியதில் மாணவர் காயம்
Published : Dec 3, 2023, 3:43 PM IST
சேலம்:தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறிய ஆண் மற்றும் பெண் யானைகள் பென்னாகரம், பெரும்பாலை, தொப்பையாறு காவிரி நீர் தேக்கப் பகுதியை கடந்து மல்லிகுந்தம் வழியாக மேச்சேரி அருகே சித்திக் குள்ளனூர் கிராமத்துக்கு வந்தன.
பின்னர், இரண்டு யானைகளும் எம். காளிப்பட்டி ஊராட்சி கோட்டியான் தெரு பகுதியில் உள்ள விவசாய நிலத்தை ஒட்டி உள்ள கரட்டு பகுதியில் புகுந்தன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், அந்த யானைகளை வந்த வழியே விரட்டும் பணியிலும் ஊர் மக்கள் ஈடுபட்டனர். ஆனால் அதில் தோல்வியே மிஞ்சியது.
இதனால் அதேபகுதியில் இரண்டு யானைகளும் உணவு தேடி சுற்றி திரிந்து வருகின்றன. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ மாணவர் தீபக் (வயது 20) என்பவர் யானைகள் அந்தபகுதியில் சுற்றித் திரிவதை அறியாமல் கரட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு யானைகள் நின்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார்.
அப்போது அவரை விரட்டிய யானை துதிக்கையால் தீபக்கை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி இரண்டு யானைகள் முகாமிட்டிருக்கும் தகவல் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது.
இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள், வனவர்கள் எம்.காளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு சென்றனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூர் உதவி கலெக்டர் லோகநாயகி, மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, தாசில்தார் விஜி மற்றும் வருவாய் துறையினர், போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.