கோவை முள் காட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.. கழுகு பார்வை காட்சிகள் வெளியீடு!
Published : Nov 17, 2023, 3:35 PM IST
கோயம்புத்தூர்:கடந்த சில நாட்களாக, 25க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை, குப்பனூர், தீத்திப்பாளையம் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த நிலையில்
நேற்று முன்தினம் இரவு, மதுக்கரை அய்யாசாமி கோயில் வனப்பகுதியிலிருந்து, 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறியது.
அதில் 8 யானைகள் மட்டும் குப்பனுார், சொர்ணாலயம் கார்டன் அருகில் உள்ள முள் காட்டிற்குள் புகுந்த நிலையில், இது குறித்து நேற்று (நவ.16) காலை மதுக்கரை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் மக்கள் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தும், சாலைகளில் மக்கள் நடமாட்டம் கொண்டும் இருந்தனர்.
ஆகையால் வனத்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காட்டு யானைகளை மாலையில் வனப்பகுதிக்குள் விரட்ட முடிவெடுத்தனர். காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணித்த வனத்துறையினர், இரவில் காட்டு யானைகளை எந்த பாதிப்பும் இன்றி மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே ட்ரோன் மூலம் யானைகளை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது.