சிறுத்தையைத் தொடர்ந்து ஊருக்குள் புகுந்த கழுதைப்புலி..! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
Published : Dec 1, 2023, 12:04 PM IST
ஈரோடு:சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (33). இவரது தோட்டத்தில் மல்லிகை பூ மற்றும் பல்வேறு விவசாய பயிர்கள் பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தில் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த வேலுச்சாமி (23) என்பவர் தனது 500 செம்மறியாடுகளை மேய்த்துக்கொண்டு, ஆட்டுப்பட்டி அமைத்திருந்தார்.
அதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவரது பட்டியில் இருந்த ஒரு செம்மறி ஆட்டை, இரவு நேரத்தில் கழுதைப்புலி வேட்டையாடிச் சென்றதைக் கண்ட விவசாயி ரவி மற்றும் ஆட்டுப்பட்டி அமைத்திருந்த வேலுச்சாமி, பவானிசாகர் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தினர்.
தானியங்கி கேமராக்களில் கழுதைப்புலியின் நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து, கழுதைப்புலியை பிடிப்பதற்காக மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்துள்ளனர். மேலும், கழுதைப்புலியின் நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அத்யாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.