9 நாட்களுக்குப் பின் மீண்டும் குதூகலமான கும்பக்கரை அருவி!
Published : Oct 21, 2023, 2:12 PM IST
தேனி:பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மற்றும் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில், அருவியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது.
எனவே, கடந்த 9 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து உள்ளனர். மேலும், தற்போது தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க:தேனியில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின - முதல் போக நெல் சாகுபடி நடவுப் பணிகள் தீவிரம்!