தேனியில் கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் ரசாயனம் ஊற்றி அழிப்பு! - etv bharat tamil
Published : Nov 19, 2023, 2:10 PM IST
|Updated : Nov 19, 2023, 2:46 PM IST
தேனி:வைகை அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் உள்பட அனைத்து வகையான மீன்களும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், குளிர்சாதனப் பெட்டிகளில் பல நாட்கள் வைத்து, அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும், மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதனையடுத்து, தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் செயல்படும் சுமார் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும், மீன்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அதில், குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து, கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், சுமார் 20 கிலோ கெட்டுப்போன மீன்களை ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில், இது போன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.