தீபாவளி பண்டிகை எதிரொலி; 50 கிலோ காலாவதியான பலகாரங்கள் பினாயில் ஊற்றி அழிப்பு!
Published : Nov 9, 2023, 1:56 PM IST
தென்காசி: தீபாவளி பண்டிகை வருகின்ற 12ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் ஸ்வீட்ஸ், கார பலகாரங்கள் வாங்குவதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பேக்கரிகள் மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி அருகில் உள்ள மேலகரம், இலஞ்சி, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பகுதிகளில் பேக்கரிகள் மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று (நவ.08) ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அடிப்படையில் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், காலாவதியான மற்றும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்ட ஜாங்கிரி, காராச்சேவு போன்ற 50 கிலோ பலகாரங்களைக் கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும், காலாவதியான குளிர்பானங்கள், கார்பன் பேப்பர்கள் உள்ளிட்டவைகள் குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. பலகாரங்கள் செய்யக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்து பொதுமக்களுக்குச் சுகாதாரமான இனிப்பு மற்றும் காரங்களை வழங்க வேண்டும் எனக் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.