ஐந்தருவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள் - ஐந்தருவி
தென்காசிமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதியம் 12 மணிக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக தற்போது ஐந்தருவியில் உள்ள ஐந்து அருவிகளிலும் தண்ணீரானது ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மேலும், ஐந்தருவியில் அளவுக்கு அதிகமான வெள்ளம் தற்போது கொட்டி வருவதன் காரணமாக, ஐந்து அருவிகளிலும் தண்ணீருடன் சேர்த்து சிறு, சிறு கற்கள் விழுந்து வருகிறது. இருந்தபோதும், ஆபத்தை உணராமல் முதலில் சில இளைஞர்கள் அருவியில் குளித்து வந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களை அப்புறப்படுத்தினர்.
தற்போது ஐந்தருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி - தேனி சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!