கடற்கரைப் பகுதியில் படையெடுத்து நிற்கும் ஜெல்லி மீன்கள்; மீன்வளத்துறையினர் ஆய்வு! - Tuticorin Fishing Harbour
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் மீன் வகைகளில் ஒன்றான ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி உள்ளது. மீன் பிடித்துறைமுகம், பழைய துறைமுகம் ஆகியவற்றை ஒட்டிய கடல் பகுதிகளில் ரோஸ் மற்றும் வெள்ளை நிற ஜெல்லி மீன்கள் படையெடுத்து திரண்டுள்ளன. ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் இந்த ஜெல்லி மீன்களானது மனித உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும் என்பதால், இதை சொறி மீன்கள் என மீனவர்கள் அழைக்கின்றனர்.
எனவே, அந்த ஜெல்லி மீன்கள், வலைகளில் சிக்கினால் அவற்றை மீனவர்கள் கைப்படாமல் கடலில் விட்டு விடுகின்றனர். ஆழ்கடல் பகுதிகளிலும், பவளப்பாறைகள் மற்றும் குளிர்ந்த நீர் உள்ள இடங்களிலும் வசிக்கும் இந்த ஜெல்லி மீன்கள் தற்போது தூத்துக்குடி பக்கம் ஒதுங்கி உள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், "புதிய துறைமுகம் பகுதியில் விரிவாக்கம் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள ஜெல்லி மீன்கள் நீரோட்டம் எந்த பகுதியில் உள்ளதோ அந்த பகுதிக்கு இழுத்துச் செல்லப்படும். அவ்வாறு இவை மீன்பிடித் துறைமுகம் பகுதியில் ஒதுங்கி இருக்கலாம்" என்றனர். மேலும், ஜெல்லி மீன்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.