களைகட்டும் குலசை தசரா திருவிழா; மந்தமான மீன் விற்பனை!
Published : Oct 21, 2023, 1:45 PM IST
தூத்துக்குடி: தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் பகுதி முழுவதும் மக்கள் பூஜை, வழிபாடு என பக்திமயத்தில் இருந்து வருகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஏராளமானோர் அசைவ உணவுகளை உண்ணுவதை தவிர்த்துள்ளனர். சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று (அக்.21) ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான படகுகள் கரை திரும்பின. இந்த படகுகளில் அதிக அளவு ஊழி, சீலா, விளைமீன் ஆகிய மீன்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆனால் இன்று (அக்.21) மீன்களின் வரத்து அதிகமாக இருந்தும், மீன்களை வாங்க குறைவான பொதுமக்களே வந்திருந்தனர். இதன் காரணமாக கிலோ 1,200 ரூபாய் வரை விற்பனையான சீலா மீன், இன்று (அக்.21) கிலோ 650 ரூபாய்க்கும், ரூபாய் 500-க்கு விற்பனையான விளைமீன் 300 ரூபாய்க்கும், 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையான ஊழி மீன் அதிக வரத்து காரணமாக கிலோ 200 ரூபாய் வரையிலும், பாறை கிலோ 200 ரூபாய் வரையிலும், சூரை நூறு ரூபாய் வரையிலும் விற்பனையானது.
மீன்களின் கடும் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், இன்னும் நான்கு நாட்கள் கழித்து தசரா திருவிழா கொண்டாடவிருக்கும் நிலையில், திருவிழா முடிந்த பின்பு மீன்களின் மந்தவிலை மாறும் என்றும், பின்னர் மீன்களின் விலை உயரும் என்று மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.