திருவண்ணாமலையில் இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி.. 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - சதுரங்க விளையாட்டு போட்டி
Published : Sep 3, 2023, 5:13 PM IST
திருவண்ணாமலை:இந்திய அளவிலான சதுரங்க போட்டி (India level chess tournament) திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (செப்.3) நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 350க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பத்து வயது முதல் பெரியவர்கள் என பல்வேறு வயதினர் கலந்து கொள்ளும் இந்த சதுரங்க விளையாட்டுப் போட்டி, ஓபன் ரேப்பிட் ஸ்கோர் என்ற திறந்தவெளி சுற்று மூலம் இன்று ஒரு நாள் போட்டியாக நடைபெற்று வருகிறது. மேலும், இன்று நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மதிப்பெண்கள் பதிவு செய்யப்படுவது, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
மேலும், போட்டியானது இன்று மாலை 6 மணி வரையில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வெல்லும் நபர்களுக்கு முறையே 20 ஆயிரம் ரூபாய், 18 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் அனைவருக்கும், சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்படுகிறது.