ஏசி மின்கசிவால் தீ விபத்து: பால்கனி வழியாக மீட்ட தீயணைப்புத்துறையினர்! - அசோக் நகர்
சென்னை: அசோக் நகர் வாசுதேவபுரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் முகுந்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர் மகள், மனைவியுடன் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை முகுந்தன் உட்பட அனைவரும் வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த ஏசி, லேப்டாப் போன்ற மின்சாதன பொருட்கள் எரிந்து வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்த முகுந்தன் உட்பட 4 பேரும் பயந்து வீட்டு பால்கனி அருகே நின்று கூச்சலிட்டுள்ளனர். பின்னர் கூச்சல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அசோக் நகர் தீயணைப்புத்துறைக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
பின்னர் வீட்டில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்க முயற்சித்த போது, புகை மண்டலமாக இருந்ததால் உட்புறம் தாழிடப்பட்ட தாழ்ப்பாளைத் திறக்க முடியவில்லை. ஆகையால் உடனடியாக சிக்கிக்கொண்ட நபர்களை பால்கனி வழியாக ஏணியை வைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். வயது முதிர்ந்தோர், சிறுவர்கள் என அனைவரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறையினரை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பால்கனி வழியாகச் சிக்கிக் கொண்டிருந்த நபர்களை மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தீவிபத்து ஏற்பட்ட காரணத்திற்காக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.