சாலை தடுப்புச் சுவருக்கிடையே சிக்கி தவித்த பசுமாடு... போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்! - Tirunelveli latest news
Published : Nov 8, 2023, 5:03 PM IST
திருநெல்வேலி:சாலை தடுப்பு சுவரில் எட்டு மணி நேரத்திற்கு மேலாகச் சிக்கித் தவித்த பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பின்புறம் உள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகம் எதிரே உள்ள கொக்கிரகுளம் செல்லும் சாலையின் தடுப்புச் சுவர் மற்றும் கடைக்கு இடையே உள்ள இடைவெளியில் நள்ளிரவு அந்த வழியாக நடந்து வந்த பசு மாடு ஒன்று தவறி உள்ளே விழுந்துள்ளது.
நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்களும் யாரும் அதனைக் கவனிக்காத காரணத்தால் அதிகாலை வரை பசுமாடு தடுப்புச் சுவரின் இடைப்பகுதியில் சிக்கிக் கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், அதிகாலை நடைப் பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள், பசுமாடு சுவருக்கு இடையில் சிக்கியிருப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுமாட்டைப் பத்திரமாக மீட்டனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாகச் சாலையின் பக்கவாட்டு சுவரில் சிக்கித் தவித்த பசு மாட்டினை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.