வாணியம்பாடி அருகே பழக்கடையில் திடீர் தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் - today tamil news
Published : Sep 15, 2023, 9:49 AM IST
திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் கடந்த பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (செப்.14) வெங்கடேசன் தனது பழக்கடைக்குத் தேவையான பல்வேறு வகையான பழங்களை இறக்குமதி செய்துவிட்டு பின்பு கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பழக்கடையில் மின்கசிவு ஏற்பட்டுக் கடை முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர், ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதனையடுத்து வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பழவகைகள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
இது குறித்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்குகாய்ச்சல்..! பீதியில் மக்கள்!