கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்! - நத்தம் தாலுகா
Published : Nov 9, 2023, 8:22 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டையூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று (நவ.8) காலை திடீரென தீ பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் அலுவலகத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கே முதியோர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த விலையில்லா வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீப் பற்றியது எப்படி? மின் கசிவு மூலம் நடந்ததா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நத்தம் காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.