பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - துரிதமாக செயல்பட்ட வாணியம்பாடி போலீசார்! - today news
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் பிரபல தனியார் அசைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று உணவக ஊழியர்கள் உணவு தயார் செய்து கொண்டிருந்தபோது, உணவகத்தின் மேலே உள்ள புகை கூண்டு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அங்கு சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர போலீசார் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் மேலே சென்று தொட்டியில் இருந்த தண்ணீரை வாளியில் எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உணவு தயார் செய்யும் இடத்தில் இருந்து வரும் புகையுடன் தீ வேகமாக பரவி புகைக் கூண்டில் தேங்கி ஒட்டியுள்ள தூசுகளில் தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.