கோழிப்பண்ணையில் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து! - Fire accident
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் முத்துவேடு செல்லும் சாலையில் கோழிப்பண்ணை ஒன்று வைத்துள்ளார். முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின் ஏற்றத்தாழ்வு காரணமாக, உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவது தொடர்கதை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை ராஜேந்திரனின் கோழிப்பண்ணையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாக பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி பண்ணை முழுவதும் சூழ்ந்தது. இந்த பயங்கர தீ விபத்தில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3,000 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன.
இந்த தீ விபத்து தொடர்பாக ராஜேந்திரன் கூறும் போது, உயர் மின்னழுத்தம் ஏற்பட்ட காரணத்தால் பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீயில் ஒரு சில தினங்களில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து கோழிகளும் தீயில் எரிந்து துடி துடித்து இறந்தன. இந்த தீ விபத்தில் சுமார் 15 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.