கோபிசெட்டிபாளையம் அருகே ஓடும் காரில் தீ விபத்து.. உயிர் தப்பிய இருவர்! - erode car fire
Published : Nov 28, 2023, 10:32 AM IST
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே, மேட்டுவலுவு குடியிருப்பு பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் மற்றும் ஓட்டுநர் உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே மேட்டுவலுவு சுப்பணன் வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் அவரது ஓட்டுநர், தண்ணீர்பந்தல் புதூரைச் சேர்ந்த ராமச்சந்திரனை காரை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் காரில் ஏறி அப்பகுதியிலிருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, காரை நிறுத்திவிட்டு, பேராசிரியர் குணசேகரன் மற்றும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பி உள்ளனர்.
இருவரும் காரில் இருந்து இறங்கிய ஒரு நிமிட நேரத்திற்குள், தீயானது மளமளவெனப் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது. அதேநேரம், குடியிருப்பு பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த கார், திடீரென நகர்ந்து சிறிது தூரம் சென்று ஒரு வீட்டின் முன் நின்றுள்ளது.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினர், பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமானது. கார் தீப்பற்றிய நிலையில், காரில் இருந்து பேராசிரியரும், ஓட்டுநரும் உடனடியாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.