Onam festival: ஆட்சியர் அலுவலகத்தில் அத்தப் பூ கோலமிட்டு பெண் ஊழியர்கள் நடனம்!
Published : Aug 29, 2023, 8:34 AM IST
கன்னியாகுமரி: கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகையானது மகாபலி சக்கரவர்த்தி நாட்டு மக்களை காண வருவதை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. அத்த பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஊஞ்சல் ஆடி, வித விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தியும் மிக சிறப்பான முறையில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரியில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் ஓணம் பண்டிகை கன்னியாகுமரியிலும் களைக்கட்டி உள்ளது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அத்தப் பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
இதில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும் இஸ்லாமிய பெண் ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அத்த பூ கோலம் இட்டு திருவாதிரை நடனம் அடி உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மேலும் ஒணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.