Video Leak: GH-ல் சிகிச்சைக்கு சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் ஊழியரால் பரபரப்பு - திருநெல்வேலி
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் மட்டுமின்றி, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், முக்கூடல் மற்றும் கடையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
இங்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளிடம் நுழைவுச் சீட்டுக்கு ரூ.100 லஞ்சம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் 100 ரூபாய் இல்லை என்றதால் ஊழியர் திருப்பி அனுப்பி உள்ளார். இதையறிந்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற சில சமூக ஆர்வலர்கள் நுழைவுச் சீட்டு வழங்கிய மேரி ராஜன் என்ற பெண் ஊழியரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக கேட்டனர்.
'இந்தப் பணத்தை யார் உங்களிடம் வாங்கச்சொன்னார். திமுக வாங்க சொன்னதா?. அமைச்சர் வாங்க சொன்னாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண் ஊழியர் 'இனிமேல் நான் காசு வாங்கமாட்டேன், மன்னித்து விடுங்கள்' என்றார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் அதே குற்றச்சாட்டை தெரிவித்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் லஞ்சம் பெறுவதை கண்டித்து விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் திடீரென அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: Video: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்