கரும்பு டன்னுக்கு ரூ.4000; ஊக்கத்தொகை ரூ.500 வேண்டும் - வேலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்:திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல கரும்பு டன்னுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கரும்புக்கான ஊக்கத்தொகையை 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பழைய எஸ்ஏபி முறையை நடப்புக் கூட்டத்தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு விவசாயிகள் கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் பல்வேறு கோரிக்கைகளுடன் வேலூர் சர்க்கரை ஆலை முன்பாக கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல கரும்பு டன்னுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இந்த ஆண்டு வேளாண்பட்ஜெட்டில் கரும்பு ஊக்கத்தொகை டன்னுக்கு 500 ரூபாய் எதிர்பார்த்தோம் என்றும்; ஆனால் வழக்கம்போல் 195 ரூபாய் வழங்கப்பட்டதால் அது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், அதனால் ஊக்கத்தொகையினை உயர்த்தி 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கரும்பு விவசாயிகளுக்கு பலன் அளித்து வந்த பழைய எஸ்ஏபி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும்; இவை அனைத்தையும் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக்கோரி அமுண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கையில் கரும்புடன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உரவிலைகள் பல மடங்கு விலை உயர்ந்து உள்ளதாகவும், வெட்டுக் கூலி 600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது எனவும், லாரி வாடகை உயர்ந்துள்ளதனால் உற்பத்திச் செலவு அதிகரித்ததாகவும்; மேலும் 60% உற்பத்தி வெட்டு கூலிக்கே சரி ஆகிவிடுகிறது என்றும் தெரிகிறது.
இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறார்கள் எனவும்; ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்முதல் விலையிலும், ஊக்கத்தொகையிலும் மாற்றமின்றி வருகிறது என்றும்; இதனால் கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட சர்க்கரை ஆலையில் 7 லட்சம் டன் அரவை இருந்த நிலையில் தற்போது 2 லட்சம் டன் மட்டுமே அரவை உள்ளது எனவும்; வேலூர் மாவட்டத்தில் மட்டும் மூவாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது என்றும்; சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக எத்தனை நாள் பிளான்ட் கொண்டு வருவதன் மூலமாக லாபம் ஈட்ட முடியும் என்றும் தம் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்.. கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!