25 ஆண்டுகளாக காவிரி நீரை பார்க்காத கிராமம்: வடிகால் வாய்க்கால் தூர்வார கோரிக்கை - Mayiladuthurai farmers requests
மயிலாடுதுறை: 25 ஆண்டுகளாக காவிரிநீரை பார்க்காத பாசனம் மற்றும் வடிகாலாக உள்ள கிளைவாய்க்காலை தூர்வாராததால், விவசாய நிலத்தில் தண்ணீரை வடியவைக்க ஆண்டுதோறும் அவதியடைந்து வருவதாகவும் மேலும் இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கஞ்சாநகரம் கிராம விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறுவை பருவத்திற்காக நடப்பாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை கடந்த 20-ஆம் தேதி வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றின் கடைசி கதவணையை காவிரி நீர் சென்றடைந்தது. தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள், கிளை ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
மேலும் தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 94ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நிலத்தை சமன்படுத்துதல், நடவு செய்தல், வளர்ந்து வரும் பயிர்களுக்கு அடிஉரமிடுதல், பூச்சிமருந்து தெளித்தல் உள்ளிட்டப் பல்வேறு விவசாய பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் இரட்டை வாய்க்காலில் இருந்து பிரியும் வடிகால் மற்றும் பாசனவசதி தரும் கிளை வாய்க்கால் தூர்வாரப்படாததால் 25 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வாய்க்காலில், காவிரி நீர் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த கிளை வாய்க்கால் பாசன வசதி தந்தாலும், முக்கியமாக வடிகால் வாய்க்காலாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிளைவாய்க்கால் தூர்வாரப்படாததால் காவிரி நீரைப் பயன்படுத்த முடியாத விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்தாலும் வயலில் உள்ள தண்ணீரை வடியவைக்க முடியாமல் விவசாயிகள் போர்வெல் என்ஜின் மூலம் தண்ணீரை வடிய வைப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
இதனால் வருடந்தோறும் விவசாயிகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, வாய்க்காலின் அகலம் குறைந்து தூர்ந்துபோயுள்ள கிளை வாய்க்காலை முறையாக தூர்வாரி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு குப்பையைக் கொட்டிய பொதுமக்கள்.. நடந்தது என்ன?