கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி - பொள்ளாச்சியில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்! - கொப்பரை தேங்காய்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி - திருவள்ளுவர் திடலில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமையில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநிலத் தலைவர் கூறியதாவது, 'தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடத்தில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்து லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் செய்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொப்பரை தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேரடி கொள்முதல் செய்வதாக மத்திய அரசு அறிவித்தாலும் இதுவரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவில்லை. விவசாயிகள் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேங்காய் கொப்பரையின் விலையினை ஏற்றம் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 140 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும்.
மேலும், மத்திய அரசு பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.