பொள்ளாச்சியில் விவசாயிகள் தேங்காய் உடைத்து நூதனப் போராட்டம்! - கோவையில் விவசாயிகள் நூதன போராட்டம்
பொள்ளாச்சி (கோவை): தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னை விவசாயம் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஓராண்டாக தேங்காய் விலை கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. மேலும் கொப்பரை விளைச்சலும் குறைந்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னை விவசாயத்தைக் காப்பாற்ற மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும், உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும், கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150, உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கைகளில் ஏந்தி வந்த தேங்காயை சாலையில் உடைத்துப் போராட்டம் நடத்தினர்.
இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சுந்தரம், காளிமுத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தாங்கள் உடைத்த தேங்காய்களை பொதுமக்கள் நலன்கருதி, உடைத்த விவசாயிகளே தேங்காய்களை அப்புறப்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.