ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயில் விவசாயிகள் இறங்கி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - Concrete plan
ஈரோடு:சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 83 ஆவது மைலில் உள்ள ஓட்டக்குளம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி கீழ்பவானி கால்வாய் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்; “ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் நல்ல நிலையில் இருந்த மண் கரைகளைச் சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல், மோகன கிருஷ்ணன் தயாரித்த அறிக்கையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண் 276-ஐ அரசு ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 21) 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.