Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள், இளைஞர்கள் கைது
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள பிரிஜ் பூஜன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல் துறையினர், அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நேற்று (ஜூன் 2) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாயிகளையும், பெண்களையும் மத்திய அரசு தொடர்ந்து அடக்கி வருகிறது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்த பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இளைஞர் மாணவர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய பெண்கள் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லெனின் தலைமையில்
மல்யுத்த வீராங்கனை மீதான டெல்லி காவல் துறையின் வன்முறை தாக்குதலை கண்டித்தும், பாலியல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தபால் நிலையத்திற்குள் செல்ல முயற்சி செய்ததையடுத்து போலீசாருக்கும், போராட்டகார்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.