'பொங்கல் பரிசுக்கான கரும்பை அரசே கொள்முதல் செய்க' - விவசாய சங்கம் கோரிக்கை - பொங்கல் பண்டிகை
Published : Jan 4, 2024, 10:50 AM IST
ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (ஜன.3) நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் சின்னசாமி, "பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 ஆக உயர்த்தி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. புயல் பாதிப்பு காரணமாக, பாதிப்பு ஏற்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மற்றும் மழை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட, தென் மாவட்டங்களிலும் சேதமடைந்த விவசாய விளை நிலத்திற்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முதல் 15 நாட்கள் வரை தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழக அரசு (Pongal Festival) பொங்கல் பண்டிகையையொட்டி, நியாயவிலைக்கடை மூலம் வழங்க உள்ள பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு இடம் பெறுவதுடன் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்" என அனைத்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.