‘கனிம வள கடத்தலை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - விவசாயிகள் கோரிக்கை
கோயம்புத்தூர்:தமிழ்நாடு அரசு கல்குவாரிகளுக்கு என சட்டப் பேரவையில் தனி சட்டம் அமைத்து கனிம வள கடத்தலை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தமிழ்நாடு - கேரளா எல்லையான எட்டி மடையில் கோவை மாவட்ட விவசாயிகள் சார்பில் கேரளாவுக்கு கனிம வள கடத்தலை தடுக்க கோரி விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயி சு. பழனிச்சாமி கூறுகையில் ,“பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கல்குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. தனி வசூல் மையம் அமைத்து அதிக அளவில் டிப்பர் லாரிகளில் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. விவசாய நிலங்கள் அருகில் இருக்கும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பாதுகாவலன் ஆகவே சட்டப் பேரவையில் கனிம வள கடத்தலை தடுக்கும் விதமாக சட்டம் இயற்றப்பட வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லதொரு முடிவு எடுப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்” என தெரிவித்தார். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச்.11) கோவையில் நெசவாளர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு