Sathanur Dam : வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை! தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! - Sathanur Dam
Published : Sep 26, 2023, 7:07 AM IST
திருவண்ணாமலை: சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மற்றும் ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிற்கு வினாடிக்கு ஆயிரத்து 570 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்துள்ள கன மழையால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 117 அடியை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. சாத்தனூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என பொதுப் பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றின் வெள்ள நீர் புகுந்துவிடும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.