தமிழ்நாடு

tamil nadu

கோவையில் 40கி.மீ வேகத்தை தாண்டினால் அபராதம் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ETV Bharat / videos

கோவை நகரின் முக்கிய இடங்களில் ரேடார் கேமராக்கள்.. 40 கி.மீ வேகத்தை தாண்டினால் அபராதம்! - பாலக்காடு சாலை

By

Published : Jul 28, 2023, 1:53 PM IST

கோயம்புத்தூர்:40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என கோவை மாநகர காவல் துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே கோவை மாநகர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் வாகனங்களின் வேகத்தை கணக்கிடும் நவீன கருவிகளைக் கொண்டு அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

இந்த நிலையில், கோவை மாநகரில் ஸ்பீடு ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 28) துவக்கி வைத்தார். இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

அபராத விதிப்பு உரிய ஆவணங்கள் உடன் வாகன உரிமையாளருக்கு இ-சலான் மூலம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர காவல் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக, கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று முக்கியமான சாலைகளில் 3டி ஸ்பீடு ரேடார் பொருத்திய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை வேகத்தை நாம் கண்டறியலாம். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும்.

எனவே, 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்த இ-சலான் அனுப்பப்படும். கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. மேலும், பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details