மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலை கோட்டை விட்ட திமுக.. நாமக்கல்லில் அதிமுக அமோக வெற்றி!
நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் ஊரக பகுதிக்கு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த செந்தில், கனகா, சுகிர்தா, செல்லப்பன், இன்பதமிழரசி, தவமணி, ருத்ரா தேவி, பாமக வடிவேலன் ஆகிய 8 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், விமலா, பிரேமா, ராஜாத்தி, செந்தில்குமார், அருள்செல்வி, துரைசாமி, பிரகாஷ் (அதிமுக ஓ.பி.எஸ்) ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஊராட்சிக்குழு தலைவர் சாரதா(அதிமுக) தலா ஒரு வாக்கு செலுத்திய நிலையில் அதிமுக வெற்றிபெற்றது. வெற்றிப்பெற்ற அனைவரும் முன்னாள் அதிமுக அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு பொன்னாடை அணிவித்தும் அவரின் காலில் விழுந்தும் ஆசி பெற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய தங்கமணி, “திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சமர்ப்பிப்போம். இந்த வெற்றியானது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆரம்பம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் மதுக்கடைகளைக் குறைக்கப் பலமுறை வலியுறுத்தியதன் விளைவாகத் தமிழக அரசு தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. ஆனால் கோயில்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நிறைந்து உள்ள மதுக்கடைகளை மூடாமல், விற்பனை குறைவாக இருந்த டாஸ்மாக் கடைகளை திமுக அரசு மூடி உள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் தொடர்ந்து குரல் எழுப்பப்படும்” என்று உறுதியளித்ததுடன் அதிமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?