"புதுச்சேரியில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடப்பதால் குடியரசுத் தலைவரை பார்க்க போகிறோம்" - நாராயணசாமி! - ஐந்து மாநில தேர்தல்
Published : Nov 26, 2023, 7:48 PM IST
புதுச்சேரி:முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தெலங்கானா மாநிலத்தில் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம். 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தெலங்கானாவில் மொத்தம் 119 இடங்களில் பாஜகவிற்கு 7ல் இருந்து 9 இடங்களுக்கு மேல் வராது.
புதுச்சேரியில் எந்த ஒரு தொழிலும் செய்யாத முதலமைச்சர் ரங்கசாமி, 5 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது?. அதேபோல் பாஜகவை சேர்ந்த ஒரு அமைச்சர் காமராஜர் சாலையில் வங்கி இயங்கி வந்த இடத்தை தனது மனைவி பெயரில் வாங்கி உள்ளார். இவருக்கும் பணம் எங்கிருந்து வந்தது?.
புதுச்சேரியில் கொள்ளை அடிக்கும் ஆட்சி நடக்கிறது. ஆளுநரும் கூட்டு கொள்ளை. அதனால் குடியரசுத் தலைவரை பார்க்க போகிறோம். இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நடக்கும் ஊழலை வேடிக்கை பார்ப்பதால் பிரதமருக்கும் தொடர்புள்ளது. இதற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதில் கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.