நாகை மகளிர் கல்லூரியில் களைகட்டிய சமத்துவ பொங்கல்..! - ஏடிஎம் மகளிர் கல்லூரி
Published : Jan 12, 2024, 1:34 PM IST
நாகப்பட்டினம்:தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாகவும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா தை 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா களைகட்டி வருகிறது.
அந்த வகையில், நாகப்பட்டினம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா இன்று (ஜன.12) கொண்டாடப்பட்டது. கல்லூரியில் வண்ண தோரணங்கள் மற்றும் கரும்பு தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர். அதன்பின், புது மண்பாணையில் பொங்கலிட்டனர்.
தமிழர்களின் பாராம்பரிய ஆடையான புடவை உடுத்தி வந்த மாணவிகள், பொங்கல் பொங்கியபோது ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
மேலும் மாணவிகள், பேராசிரியர்கள் என அனைவரும் கும்மியடித்து, குலவையிட்டு உற்சாக நடனம் ஆடினர். இது குறித்து மாணவிகள் தெரிவித்தபோது, “எங்கள் கல்லூரியில் மும்மதங்களைக் கடந்து படித்து வருகிறோம். இந்த பண்டிகையை சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.
அதேபோல் எந்த நேரமும் படிப்பு, படிப்பு என்று இருக்கும் போது, இது போன்று கல்லூரிகளில் பண்டிகைகள் கொண்டாடும் போது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இந்த விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.