அண்ணாமலையார் நிலத்தை சுருட்டிய பாஜக பிரமுகர்.. 23,800 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே, பாஜக கோயில் மேம்பாட்டு ஆன்மீகப் பிரிவின் மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான சங்கர் என்பவர், அம்மணி அம்மன் மடம் மற்றும் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தார்.
அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. அதன்பின் மார்ச் 15ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில், செயல்முறை நடவடிக்கை என்ற அடிப்படையில் திருக்கோயில் அசையா சொத்து ஆக்கிரமிப்பு 22/1959, 78 மற்றும் 79 ஆகிய பிரிவின் கீழ் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கினார். இந்த நிலையில் இன்று (மார்ச் 18) கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமையில், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 250 காவலர்கள், வருவாய்த்துறையினர், கோயில் ஊழியர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் என அனைவரும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான அம்மணி அம்மன் மடம் மற்றும் அருகே உள்ள சுமார் 23 ஆயிரத்து 800 சதுர அடி நிலப்பரப்பை, ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.