en mann en makkal: அண்ணாமலையின் பாதயாத்திரை திருநெல்வேலியில் தொடங்கியது.. - tirunelveli news today in tamil
திருநெல்வேலி:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.ராமநாதபுரத்தில் தொடங்கிய அவரது நடைபயணம் விருதுநகர் தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்கள் தொடர்ந்து இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணாமலை தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.
திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 19ஆம் தேதி) காலை 10 மணி அளவில் பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் பகுதியில் அண்ணாமலை தனது பயணத்தை தொடங்கினார். சமாதானப்புரத்தில் தொடங்கி மனக்காவலம்பிள்ளை நகர் வழியாக பாளையங்கோட்டை மார்க்கெட் தெற்கு பஜார் பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
இறுதியாக பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோயில் அருகேநடை பயணத்தை முடித்துக் கொண்டு தொடர்ந்து அங்கு சில நிமிடங்கள் அவர் உரையாற்ற இருக்கிறார். பின்னர் இன்று மாலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நடை பயணத்தின் போது அண்ணாமலை பொது மக்களை பார்த்து கையசைத்த வண்ணம் சென்றார்.
இந்த பயணத்தின் போது தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.