பயணி தவறவிட்ட 20 சவரன் நகையை பத்திரமாக ஒப்படைத்த போக்குவரத்து ஊழியர்கள்! - Pudukkottai bus stand
புதுக்கோட்டை: கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிளைட்டன். இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இச்சூழலில் நேற்று காலை சென்னையில் இருந்து கீரனூருக்கு வந்துள்ளார். அதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர், பின் திருச்சியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி கீரனூரில் இறங்கியுள்ளார்.
அவர் கீரனூரில் இறங்கிய பின்புதான் தான் கொண்டு வந்த பேக்கை பேருந்திலேயே விட்டுவிட்டு கீழே இறங்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவர் புதுக்கோட்டை புறநகர் போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துனரை தொடர்பு கொண்ட போக்குவரத்து கழக அலுவலர்கள் கீரனூரில் பயணி விட்டுச் சென்ற பேக் பேருந்திலேயே உள்ளதாகவும், அதனை பத்திரமாக எடுத்து வைக்குமாறும் அறிவுறுத்திள்ளனர்.
இதனைக் கேட்ட பேருந்தின் நடத்துனர் ஜோசப் பால்ராஜ் பயணி கிளைட்டன் விட்டுச்சென்ற பேக்கை எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளார். பின்னர் நேற்று இரவு அந்த பேருந்து மீண்டும் புதுக்கோட்டை வந்தபோது போக்குவரத்து கழக புறநகர் மேலாளர் தில்லைராஜ் முன்னிலையில், பேருந்தின் ஓட்டுனர் கார்த்திகேயன், நடத்துனர் ஜோசப் பால்ராஜ் ஆகியோர் அந்த பேக்கை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மூலம் பயணி கிளைட்டனிடம் ஒப்படைத்துள்ளனர்.
பேக்கை பெற்றுக் கொண்ட கிளைட்டன் அதனை திறந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் பத்திரமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர், மேலாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். தற்போது புதுக்கோட்டையில் பயணி தவறவிட்ட 20 சவரன் நகை இருந்த பேக்கை பத்திரமாக போக்குவரத்து கழக ஊழியர்கள் உரியவரிடமே ஒப்படைத்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.