ஓசூர் அருகே கிராமத்தில் நுழைந்த யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - krishnagiri Elephant
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
ஓசூர் அருகே உள்ள தளி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
இந்த நிலையில், தளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் அருகில் உள்ள தேவகானப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்கிருந்த தைல மரத் தோட்டத்திற்குள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த, தளி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று (மார்ச்.26) அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர், பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர். தேவகானப்பள்ளியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கிராமப்பகுதிகள் வழியாக தளி வனப்பகுதிக்கு 5 காட்டு யானைகளும் விரட்டியடிக்கப்பட்டன. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.