குன்னூர் பகுதியில் உலாவும் யானைகள்..பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை
Published : Jan 16, 2024, 11:12 AM IST
நீலகிரி: கடந்த மாதம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரரைத் தேடி, 10 காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளுக்குள் நேற்று (ஜன.16) வந்தன. இதில் ஒரு குட்டியுடன் கூடிய தாய் யானை திரும்பி சென்று விட்டதால், மீதமுள்ள 8 காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, நஞ்சப்பசத்திரம், காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்தன. இதனை அடுத்து குன்னூரின் நகர் பகுதியான கன்னி மாரியம்மன் கோயில் தெருவுக்குள் புகுந்தன.
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு அருகே சாலை பகுதிக்கு வந்த யானைகள் சாலை கடந்தன. இதனைத் தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர்கள் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் திலீப், லோகேஷ், விக்ரம், ராம்குமார், ஞானசேகர், சுப்பிரமணி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் யானைகள் சாலையைக் கடந்தது செல்ல வழிவகை செய்தனர்.
இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள், யானைகள் சாலையை கடந்து செல்லும் வரை நிறுத்தப்பட்டன. மேலும் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யானைக் கூட்டத்தை கண்டவுடன் அதிக ஒலி எழுப்பக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, யானைகள் அருகே யாரும் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் விரைவில் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.